சனி, 19 ஏப்ரல், 2014

பயம் நீக்கும் பைரவர்‬!



By Muthukumar On Apr 19
வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களால் ஏற்படும் பயம் நீங்க, ஸ்ரீபைரவரை வழிபட வேண்டும். சீர்காழி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீசட்டநாதரும், திருவெண்காடு தலத்தில் அருளும் ஸ்ரீஅகோரமூர்த்தியும் பைரவ அம்சம் என்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலங்களுக்குச் சென்று, இந்த தெய்வங்களைத் தரிசித்து வழிபட, அல்லல்கள் நீங்கும்.
காளஹஸ்தி கோயிலில் இரண்டு பைரவர்களைத் தரிசிக்கலாம். அவர்களில் ஒருவர், பாதாள பைரவர். கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு முன்னதாக இந்த பைரவர்களை வழிபட, பணிகள் தடையின்றித் தொடரும் என்பது நம்பிக்கை.
பழநி மலை அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளியுள்ளார். இவர் சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் மூர்த்தி ஆவார்.
சேலம் சிருங்கேரி சங்கர மடத்தில் ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளால் யந்திர ஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சந்நிதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக அருளும் இவர் சாந்நித்தியம் மிகுந்தவர். மேலும், இங்குள்ள ஸ்ரீகாசிவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீகால பைரவரைத் தரிசித்து வழிபடுவதும் விசேஷம்!
சென்னை- திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழு பைரவர் சந்நிதிகள் உள்ளன.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு வடைமாலை சாற்றி, மனதார வழிபட, தீயசக்திகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்; சத்ரு பயம் அகலும்; எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக