புதன், 17 ஜூலை, 2013

தோஷம் நீக்கும் கால பைரவர் வழிபாடு

Posted On July 17,2013,By Kumaran                                              தோஷம் நீக்கும் கால பைரவர் வழிபாடு


1ஸ்ரீ பைரவர் சிவனது  அம்சமாகும். சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் பைரவ அம்சம் அதி முக்கியமானது. பைரவர் என்னும் சொல் பயத்தை நீக்குபவர். அடியார்களின் பாபத்தை உண்டு நீக்குபவர். படைத்தல் காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து  இறையருள் தொழில்களை தமது சிவாய நம என்ற  பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் 84 லட்சம் உயிரினங்களையும் காத்து ஆன்மாக்களை நொடிப் பொழுதில் தனது சூல நுனியினால் தொட்டு உடன் நீக்கி காலம் கருதாது காப்பதால் கால பைரவராகின்றார்.
படைத்தலை உடுக்கையும், காத்தலை கையில் உள்ள கபாலமும், ஒடுக்குதலை உடலில் பூசிய விபூதி பஸ்பமும், திரிசூலம் அதிகார ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவரே ஆனந்த பைரவராக உலகை படைக்கின்றார். பின்பு காலபைரவராக உலகை காக்கின்றார். அடுத்து காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்.
எவ்வித ஆச்சாரமும், அனுஷ்டானமும் இல்லாமல் இக்கட்டான காலத்தில் அவரை ஒரு  முகமாக மனதில் எண்ணினாலே போதும் மனதுடன் தொடர்புடைய ஆகாச பைரவர், உடனே செயல்பட்டு  ஆபத்து  காலத்தில் நம்மை காப்பாற்றுவார். ஸ்ரீ பைரவரைப் பற்றி ருக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும், விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகாசி காண்டத்தில் ஸ்ரீ பைரவர் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
திருக்கோவில் நடை திறப்பதற்கு முன் கால பைரவருக்கு அதிகாலை பூஜை  வழிபாடு செய்து  சாவியை அவரிடமிருந்துதான் பெற்று நடை திறக்கப்படும். இரவு நடை சாத்திய பிறகு பைரவர் பூஜை செய்து  பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு பைரவர் காலில் திருக்கோவில் ஒப்படைத்து விட்டுதான் செல்வார்கள்.
பைரவ வழிபாடு ஆலய சொத்துக்களை பாதுகாப்பதுடன், ஆலயத்திற்கு வருகை தந்து தெய்வ அருளுக்கு பாத்திரமாகும் மக்களையும் பாதுகாக்கின்றார். பைரவர் பார்ப்பதற்கு உக்கிரமாக காணப்பட்டாலும் அடியார்களின் பாவத்தை போக்கி பயத்தை உண்டு பண்ணுபவராகவும் காட்சியளிக்கின்றார்.
கால பைரவர் வழிபாடு

சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியை தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும்.
சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும்.
எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திர தொல்லைகளும் அடியோடு அகலும். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லா தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் தேடி வரும்.
தொழிலில் லாபம் கிடைக்கும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, எம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
நல்லருள் உண்டாகும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக